விவிலியம் வாசிப்பு- சிறில் அலெக்ஸ்

‘விவிலியம் ஒரு நூல் அல்ல ஒரு நூலகம்’ என்பது ஒரு கூற்று. பல்வேறூ வகையான நூல்களின் தொகுப்பு அது. கத்தோலிக்க விவிலியத்தில் மொத்தம் 73 புத்தகங்கள் உள்ளன. யூத விவிலியத்தில் 24 புத்தகங்கள் உள்ளன. பிற கிறித்துவ சபைகள் சில புத்தகங்களை நீட்டியும், பிரித்தும், நீக்கியும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.


இரு பெரும் பிரிவுகளாக விவிலியம் பிரிக்கப்பட்டுள்ளது 1. பழைய ஏற்பாடு 2. புதிய ஏற்பாடு.


பழைய ஏற்பாடு மைய கருத்துக்கள்

  1. ஒரே கடவுள் - மிக முக்கியமான வேறுபாடு

  2. கடவுள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வழியாக மக்களுடன் உறவாடினார் (தலைவர்கள், நீதிமான்கள், அரசர்கள், தூதுவர்கள், சாமனியர்கள்)

  3. யூதக் இனக்குழு வரலாறு

  4. கடவுளை நம்பும்போது நன்மையும், விலகும்போது தீமையும் வந்து சேரும்

  5. மெசியா குறித்த தீர்க்கதரிசனங்கள்



பழைய ஏற்பாட்டின் பிரிவுகள் (46)


மோசேயின் புத்தகங்கள் (அ) தோரா (அ) Pentateuch (5)

  1. தொடக்கநூல் - (ஆதியாகமம்) - படைப்பு, ஆதாம் ஏவாள், காயின் ஆபேல், நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, 12 புதல்வர்கள், யோசேப்பு, எகிப்துக்குச் செல்லுதல்

  2. விடுதலைப் பயணம் - (யாத்திராகமம்) - எகிப்தில் அடிமைகளாதல், மோசெ(மோயீசன், Moses), எகிப்தின் பேரழிவுகள், சென்ஹகடல் பிளப்பு, பாலைவனப் பயணங்க்கள், பத்துக் கட்டளைகள், பிற கட்டளைகள், பாலையில் 40 வருடங்கள். 

  3. லேவியர் - யூத மதச் சடங்குகளின் முறைமைகள்

  4. எண்ணிக்கை - (எண்ணாகமம்) - சீனாயிலிருந்து கானான் வரும் வரலாறு

  5. இணைச் சட்டம் - (உபாகமம்) - மோசேயின் பிரிவுச் செய்தியின் வழியில் சொல்லப்பட்ட சட்டங்க்கள், அறிவுரைகள் 


வரலாற்று நூல்கள்(16)


  1. யோசுவா - Joshua

  2. நீதித் தலைவர்கள் - Judges

  3. ரூத்து 

  4. 1 சாமுவேல் 

  5. 2 சாமுவேல் 

  6. 1 அரசர்கள் 

  7. 2 அரசர்கள் 

  8. 1 குறிப்பேடு (Chronicles) 

  9. 2 குறிப்பேடு 

  10. எஸ்ரா 

  11. நெகேமியா 

  12. தோபித்து 

  13. யூதித்து - Judith

  14. எஸ்தர் 

  15. 1 மக்கபேயர் 

  16. 2 மக்கபேயர்


கவிதை நூல்கள்(7)


  1. யோபு 

  2. திருப்பாடல்கள் - Psalms - சங்கீதங்கள்

  3. நீதிமொழிகள் - Proverbs 

  4. சபை உரையாளர் - Ecclesiastes 

  5. இனிமைமிகு பாடல் 

  6. சாலமோனின் ஞானம் 

  7. சீராக்கின் ஞானம் 


தீர்க்கதரிசிகள்(18)

  1. எசாயா 

  2. எரேமியா 

  3. புலம்பல் 

  4. எசேக்கியல் 

  5. தானியல் 

  6. ஓசேயா 

  7. யோவேல் 

  8. ஆமோஸ் 

  9. ஒபதியா 

  10. யோனா 

  11. மீக்கா 

  12. நாகூம் 

  13. அபக்கூக்கு 

  14. செப்பனியா 

  15. ஆகாய் 

  16. செக்கரியா 

  17. மலாக்கி (கிரேக்கம்) 

  18. பாரூக்கு 


புதிய ஏற்பாடு(27)

நற்செய்திகள் (Gospels) - (4) - இயேசுவின் வாழ்க்கை, போதனைகள்


  1. மத்தேயு நற்செய்தி 

  2. மாற்கு நற்செய்தி 

  3. லூக்கா நற்செய்தி 

  4. யோவான் நற்செய்தி 


வரலாறு (1)


  1. திருத்தூதர் பணிகள் - Acts of apostles - துவக்க கிறித்துவத்தின் வரலாறு


சின்னப்பரின் திருமுகங்கள் (கடிதங்கள்) (13)


  1. உரோமையர் 

  2. 1 கொரிந்தியர் 

  3. 2 கொரிந்தியர் 

  4. கலாத்தியர் 

  5. எபேசியர் 

  6. பிலிப்பியர் 

  7. கொலோசையர் 

  8. 1 தெசலோனிக்கர் 

  9. 2 தெசலோனிக்கர் 

  10. 1 திமொத்தேயு 

  11. 2 திமொத்தேயு 

  12. தீத்து 

  13. பிலமோன் 


பிற திருமுகங்கள்(8)

  1. எபிரேயர் 

  2. யாக்கோபு 

  3. 1 பேதுரு 

  4. 2 பேதுரு 

  5. 1 யோவான் 

  6. 2 யோவான் 

  7. 3 யோவான் 

  8. யூதா 


பேரழிவின் இலக்கியம் - அதிஉவமான இலக்கியம்(Apocalyptic)

  1. திருவெளிப்பாடு


விவிலிய எழுத்து வகைகள்

  1. தொன்மங்கள் - துவக்க நூல்கள்

  2. வரலாற்று காப்பியம் - ‘பத்துக் கட்டளைகள்’

  3. வரலாறு

  4. பக்திக் கவிதைகள்

  5. காதல் கவிதைகள்

  6. புலம்பல் கவிதைகள்

  7. தீர்க்கதரிசனங்கள்

  8. நீதி போதனைகள்

  9. நீதிக் கதைகள், போதனைக் கதைகள்

  10. கடிதங்கள்

  11. சடங்கு முறைகள்

  12. சட்டங்கள்

  13. தலைமுறை பட்டியல்

  14. பிரசங்கங்கள்

  15. இறையியல் விளக்கங்கள்

  16. பேரழிவு இலக்கியங்கள்



முக்கிய அழகியல் அம்சம் 

  • Parallelism - Repetition - கருத்துக்கள் அல்லது உவமைகள் சிறிய வேறுபாடுடன் அடுத்தடுத்த வரிகளில் திரும்ப பாடப்படுவது. 


உதாரணம் : திருப்பாடல் 114: பாஸ்காப் பாடல்

ஒரு வரியைத் தொடர்ந்து வரும் இன்னொரு வரி முந்தைய வரியின் கருத்தை மீண்டும் வலியுறுத்துவதாக வருகிறது. 

1எகிப்து நாட்டைவிட்டு

இஸ்ரயேலர்

வெளியேறியபொழுது,

வேற்று மொழி பேசிய மக்களை விட்டு

யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது,

2யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று;

இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது.

3செங்கடல் கண்டது;

ஓட்டம் பிடித்தது;

யோர்தான் பின்னோக்கிச் சென்றது.

4மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும்

குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும்

துள்ளிக் குதித்தன.



எதிர்கருத்துக்கள் ஒன்றை ஒன்று தொடர்வது - Antithetic parallelism

திருப்பாடல்கள் 1 - நற்பேறு பெற்றோர்

1நற்பேறு பெற்றவர் யார்? – அவர்

பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;

பாவிகளின் தீயவழி நில்லாதவர்;

இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

2ஆனால், அவர் ஆண்டவரின்

திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;

அவரது சட்டத்தைப்பற்றி

இரவும் பகலும் சிந்திப்பவர்;

3அவர் நீரோடையோரம் நடப்பட்ட

மரம் போல் இருப்பார்;

பருவகாலத்தில் கனிதந்து,

என்றும் பசுமையாய் இருக்கும்

அம்மரத்திற்கு ஒப்பாவார்;

தாம் செய்வதனைத்திலும்

வெற்றி பெறுவார்.

4ஆனால், பொல்லார் அப்படி இல்லை;

அவர்கள் காற்று அடித்துச் செல்லும்

பதரைப்போல் ஆவர்.

5பொல்லார் நீதித் தீர்ப்பின்போது

நிலைநிற்க மாட்டார்;

பாவிகள் நேர்மையாளரின்

மன்றத்தில் இடம் பெறார்.

6நேர்மையாளரின் நெறியை

ஆண்டவர் கருத்தில் கொள்வார்;

பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.


புகழ்பெற்ற திருப்பாடல் 


ஆண்டவரே நம் ஆயர்

(தாவீதின் புகழ்ப்பா)


1ஆண்டவரே என் ஆயர்;

எனக்கேதும் குறையில்லை.

2பசும்புல் வெளிமீது எனை அவர்

இளைப்பாறச் செய்வார்;

அமைதியான நீர்நிலைகளுக்கு

எனை அழைத்துச் செல்வார்.

3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;

தம் பெயர்க்கேற்ப

எனை நீதிவழி நடத்திடுவார்;

4மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்

நான் நடக்க நேர்ந்தாலும்,

நீர் என்னோடு இருப்பதால்

எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;

உம் கோலும் நெடுங்கழியும்

என்னைத் தேற்றும்.

5என்னுடைய எதிரிகளின் கண் முன்னே

எனக்கொரு விருந்தினை

ஏற்பாடு செய்கின்றீர்;

என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;

எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்

உம் அருள் நலமும் பேரன்பும்

என்னைப் புடைசூழ்ந்து வரும்;

நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.


திராட்சைக் கொடியை உருவகமாகக் கொண்ட திருப்பாடல்


80 நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்

(பாடகர் தலைவர்க்கு: ‘சான்றுபகர் லீலிமலர்’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பா)


8எகிப்தினின்று திராட்சைக்செடி

ஒன்றைக் கொண்டுவந்தீர்;

வேற்றினத்தாரை விரட்டிவிட்டு

அதனை நட்டு வைத்தீர்.

9அதற்கென நிலத்தை

ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்;

அது ஆழ வேரூன்றி

நாட்டை நிரப்பியது.

10அதன் நிழல் மலைகளையும்

அதன் கிளைகள்

வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.

11அதன் கொடிகள் கடல்வரையும்*

அதன் தளிர்கள் பேராறுவரையும்** பரவின.

12பின்னர், நீர் ஏன்

அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்?

அவ்வழிச் செல்வோர் அனைவரும்

அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!

13காட்டுப் பன்றிகள்

அதனை அழிக்கின்றன;

வயல்வெளி உயிரினங்கள்

அதனை மேய்கின்றன.

14படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்!

விண்ணுலகினின்று

கண்ணோக்கிப் பாரும்;

இந்த திராட்சைக் கொடிமீது
பரிவு காட்டும்!

15உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,

உமக்கென நீர் வளர்த்த மகவைக்

காத்தருளும்!

16அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;

அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;

உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,

அவர்கள் அழிந்துபோவார்களாக!

17உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை

உமது கை காப்பதாக!

உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த

மானிட மைந்தரைக் காப்பதாக!

18இனி நாங்கள் உம்மைவிட்டு

அகலமாட்டோம்;

எமக்கு வாழ்வு அளித்தருளும்;

நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.

19படைகளின் கடவுளான ஆண்டவரே!

எங்களை முன்னைய

நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!

நாங்கள் விடுதலை பெறுமாறு

உமது முக ஒளியைக் காட்டியருளும்!


விவிலிய உவமைகள்

  • குயவன், களிமண், மண்பாண்டம்

  • ஆயன், ஆடுகள், வெள்ளாட்டுக்குட்டி, வெள்ளாடு

  • திராட்சைச் செடி, திராட்சை இரசம்

  • அம்பு, வில்

  • மணப்பெண், மணமகன்

  • பாறை

  • சிங்கம், மான், கழுகு


இனிமைமிகு பாடல்

சாலமோனின் தலைசிறந்த பாடல்

பாடல் 1: தலைவி கூற்று


1சாலமோனின் தலைசிறந்த பாடல்

2தம் வாயின் முத்தங்களால்

அவர் என்னை முத்தமிடுக!

ஆம், உமது காதல் திராட்சை ரசத்தினும் இனிது!

3உமது பரிமளத்தின் நறுமணம்

இனிமையானது;

உமது பெயரோ பரிமள மணத்தினும்

மிகுதியாய்ப் பரவியுள்ளது;

எனவே, இளம் பெண்கள் உம்மேல்

அன்பு கொள்கின்றனர்.

4உம்மோடு என்னைக்

கூட்டிச் செல்லும், ஓடிடுவோம்;

அரசர் என்னைத் தம் அறைக்குள்

அழைத்துச் செல்லட்டும்!

களிகூர்வோம், உம்மில் அக்களிப்போம்;

திராட்சை இரசத்தினும் மேலாய்

உம் காதலைக் கருதிடுவோம்;

திராட்சை இரசத்தினும்

உமது அன்பைப் போற்றிடுவோம்!


பாடல் 5: தலைவன்-தலைவி உரையாடல்

15என்னே உன் அழகு! என் அன்பே,

என்னே உன் அழகு!

உன் கண்கள் வெண்புறாக்கள்!

16என்னே உம் அழகு என் காதலரே!

எத்துணைக் கவர்ச்சி!

ஆம், நமது படுக்கை பைந்தளிர்!

17நம் வீட்டின் விட்டங்கள்

கேதுரு மரங்கள்;

நம்முடைய மச்சுகள்

தேவதாரு கிளைகள்.

பாடல் 7: தலைவி கூற்று

(சங்கப்பாடலை ஒத்த பாடல்)

4திராட்சை இரசம் வைக்கும்

அறைக்குள்ளே

என்னை அவர் அழைத்துச் சென்றார்;

அவர் என் மேல் செலுத்திய

நோக்கில் காதல் இருந்தது!

5திராட்சை அடைகள் கொடுத்து

என்னை வலிமைப்படுத்துங்கள்;

கிச்சிலிப்பழங்களால்

எனக்கு ஊக்கமூட்டுங்கள்.

காதல் நோயால்

தான் மிகவும் நலிந்து போனேன்.

6இடக்கையால் அவர் என் தலையைத்

தாங்கிக் கொள்வார்;

வலக்கையால் அவர் என்னைத்

தழுவிக் கொள்வார்.

7எருசலேம் மங்கையரே!

கலைமான்கள்மேல் ஆணை!

வயல்வெளி மரைகள்மேல் ஆணை!

உங்களுக்கு நான் கூறுகிறேன்;

காதலைத் தட்டி எழுப்பாதீர்;

தானே விரும்பும்வரை

அதைத் தட்டி எழுப்பாதீர்.


பாடல் 12: தலைவி கூற்று

4அவர்களைவிட்டுச்

சற்று அப்பால் சென்றதுமே

கண்டேன் என் உயிர்க்குயிரான

அன்பர்தமை.

அவரைச் சிக்கெனப் பிடித்தேன்;

விடவே இல்லை;

என் தாய்வீட்டுக்கு

அவரைக் கூட்டி வந்தேன்;

என்னைக் கருத்தாங்கியவளின்

அறைக்குள் அழைத்து வந்தேன்.

5எருசலேம் மங்கையரே,

கலைமான்கள் மேல் ஆணை!

வயல்வெளி மரைகள்மேல் ஆணை!

உங்களுக்கு நான் கூறுகிறேன்;

காதலைத் தட்டி எழுப்பாதீர்;

தானே விரும்பும்வரை

அதைத் தட்டி எழுப்பாதீர்.


7 ஆம் அதிகாரம்


1அரசிள மகளே!

காலணி அணிந்த உன் மெல்லடிகள்

எத்துணை அழகு!

உன் தொடைகளின் வளைவுகள்

அணிகலனுக்கு இணை!

கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!

2உன் கொப்பூழ்

வட்டவடிவக் கலம்;

அதில் மதுக் கலவைக்குக்

குறைவே இல்லை;

உன் வயிறு

கோதுமை மணியின் குவியல்;

லீலிகள் அதை வேலியிட்டுள்ளன.

3உன் முலைகள் இரண்டும்

இரு மான் குட்டிகள் போன்றவை;

கலைமானின்

இரட்டைக் குட்டிகள் போன்றவை.

4உன் கழுத்து தந்தத்தாலான

கொத்தளம் போன்றது;

உன் கண்கள்

எஸ்போனின் குளங்கள் போன்றவை;

பத்ரபீம் வாயிலருகே உள்ள

குளங்கள் போன்றவை;

உம் மூக்கு

லெபனோனின் கோபுரத்திற்கு இணை;

தமஸ்கு நகர் நோக்கியுள்ள

கோபுரத்திற்கு இணை.

5உன் தலை கர்மேல் மலைபோல்

நிமிர்ந்துள்ளது;

உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது;

அதன் சுருள்களுள்

அரசனும் சிறைப்படுவான்.



புதிய ஏற்பாடு

இயேசுவின் சில உவமைகள், கதைகள்


மத்தேயு 13: 44

புதையல் உவமை


44“ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.


காணாமற்போன மகன் உவமை (லூக்கா 15:11-32)

11மேலும் இயேசு கூறியது: “ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். 12அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, “அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்” என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். 13சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். 14அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15எனவே, அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். 16அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால், அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. 17அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! 18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார்.

20உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். 21மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார். 22தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; 23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். 24ஏனெனில், என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

25“அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ‘இதெல்லாம் என்ன?’ என்று வினவினார். 27அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார். 28அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். 29அதற்கு அவர் தந்தையிடம், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. 30ஆனால், விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார். 31அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. 32இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில், உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”


காணாமற்போன ஆடு பற்றிய உவமை (லூக்கா 15:3-7)

(மத் 18:12-14)

1வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். 2பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.

3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: 4“உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? 5கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; 6வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில், காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார். 7அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.


காய்க்காத அத்திமரம்

6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. 7எனவே, அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே, இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். 8தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். 9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”

நல்ல சமாரியர்

25திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். 26அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?”

என்று அவரிடம் கேட்டார்.

27அவர் மறுமொழியாக,

‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’

என்று எழுதியுள்ளது” என்றார்.

28இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்”

என்றார்.

29அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். 30அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். 31குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். 32அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். 33ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். 34அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். 35மறுநாள் இருதெனாரியத்தை* எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.

36 “கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?”

என்று இயேசு கேட்டார்.

37அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்”

என்று கூறினார்.


 


Comments

Popular posts from this blog

நிகழ்ச்சி நிரல்

வெள்ளிமலை காவிய முகாம் – 2023 -வைணவ பக்தி இலக்கியம் 1 ஜா.ராஜகோபாலன்