மதிப்புக்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

 

மணிவண்ணன் அன்புடன் எழுதியது 

உங்களுடைய உழைப்பில் (www.jeyamohan.in) பயனடைந்து கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன்முதல் முறையாக உங்களுக்கு  எழுதுகிறேன். பல வருடங்களுக்கு பிறகு தமிழில் எழுத முயற்சித்திருக்கிறேன். தவறுகளை மன்னியுங்கள்.

 

தற்போது  பாரிஸிலிருந்து இதை எழுதுகிறேன்நீண்ட கேள்விகளுக்கு மன்னிக்கவும், ஆனால் இப்பயணம் ஏற்படுத்திய தாக்கத்தால்  இந்த தேடலை ஒத்திப் போட இயலவில்லை . மேலும், PS-1 மற்றும் PS-2 திரைப்படங்களின்  வெற்றியில் நாம் அனைவரும் திளைத்திருக்கும் வேளையில், இக்கேள்விகளை நீங்கள் தான்  தெளிவு படுத்துவீர்கள் என்று உணர்கிறேன்..

 

சமீபத்தில் பிரான்ஸ்  நாட்டின் நார்மண்டி (Normandie) பகுதிக்கு பயணிக்கும் வாய்ப்பு  கிடைத்தது, பிரான்ஸ் /இங்கிலாந்து மற்றும் தமிழ்நாட்டில் நடந்த வரலாற்று நிகழ்வுகளின் காலகட்டத்தை தொடர்புபடுத்த முயற்சித்த போது எழுந்த சில கேள்விகள்/அவதானிப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தெளிவுக்காக  சில புகைப்படங்களையும்  சேர்த்துள்ளேன்.

 

இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை பெற முடிந்தால்  நன்றியுடன் மகிழ்வேன்.

 

1. Bayeux (பை-யு என்று பிரெஞ்சு மொழியில் உச்சரிக்கின்றனர் ) அருங்காட்சியகத்தில்வெற்றியாளர் வில்லியம் (William the Conqueror) ஆங்கிலேய அரியணை ஏறிய கதையை சித்தரிக்கும் திரைச்சீலை/சித்திரத்துணி (Tapestry)   காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது  . வில்லியம் என்கிற  நார்மன் (தற்போதைய பிரான்ஸ் நாட்டிலிருந்து கடல் படையுடன் சென்று ) ஹெரால்ட் என்கிற  இங்கிலாந்து அரசனை வென்ற அந்த ஹேஸ்டிங்ஸ் போர் ( Battle of Hastings) நடந்த ஆண்டு பொ.யு.1066. அந்தச்  சீலை உருவாக்கப்பட்டு ஏறத்தாழ 950+ ஆண்டுகளுக்கு   பிறகும்  அதன் பொலிவு மாறாமல் அசல்  வண்ணங்களுடன் இன்றும் காட்சியளிக்கிறது . சணல்நார் துணியில் (linen) கம்பளி நூலால் எம்பிராய்டரி மூலம் 70 மீ நீளத்தில் முழுப்  போர் விவரங்களுடன் உள்ளது.

 

இந்த போர் நடந்த  போது தமிழகத்தை ஆண்டது ராஜேந்திர சோழனின் மகன் வீரராஜேந்திரன் . ராஜேந்திர சோழன் மறைந்து இருபதே ஆண்டுகள் ஆயிருந்தன . நம்முடைய சோழ வரலாறு பெரும்பாலும் ராஜ ராஜ சோழன் மற்றும்  இராஜேந்திர சோழன் கால  கல்வெட்டுக்களையே  அடித்தளமாகக் கொண்டு இருப்பதாக நான் புரிந்துகொள்கிறேன். ஆவணப்படுத்தல் தான் நோக்கம் என்றால் துணி சார்ந்த பொருளை ஏன் ஊடகமாக தேர்வு செய்யவில்லை என்பது என் கேள்விகல்லைக் கையாளுவதை விட இது மிகவும் எளிதாக இருந்திருக்கும். காலத்தை கடந்து நிற்கும் சீலைகள் மூலம் கூடுதல் தகவல்களைப் பெற்றிருக்கலாம். பத்திர படுத்துவதற்கு பல பிரதிகளை உருவாக்குவதும்  எளிது. Bayeux  அருங்காட்சியகத்தில் அந்த நாடாத் துணியை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நெசவுத் தொழிலுக்கு பெயர் போன தமிழகத்தில் இந்த முயற்சி நடைபெறாமல் இருக்க வாய்ப்பு குறைவு . ஆனால், கல்வெட்டுகள், கோவில் தரவுகளில்  கல் , செப்பு முதலிய பொருள்களைத் தவிர  துணி, சீலைகள் பயன்பட்டதா என்று அறிய முடியவில்லை. P.S -க்கான  உங்களுடைய  ஆய்விலிருந்து கூடுதல் விவரம் ஏதேனும் உள்ளதா ?

 

 

2. என்னுடைய இரண்டாவது கேள்வி அதே போருடன் தொடர்புடையது.  இராஜேந்திர சோழன் காலத்தில், தென்கிழக்கு ஆசிய நாடுகளை கைப்பற்ற அல்லது வணிகத்திற்காக கடற்படை பயணம் மேற்கொண்டதாக படித்திருக்கிருக்கிறோம். அது வீர ராஜேந்திரன் காலத்திலும் தொடர்ந்ததாக  தகவல்கள் கூறுகின்றனஆயினும்கூட, நம் அருங்காட்சியகங்களில் பெரிய பதிவுகள் இல்லை அல்லது கப்பல்  தொழில்நுட்பத்தைப் பற்றி சமகால ஆவணங்களில்/ இலக்கியங்களில் விளக்கங்கள்/தகவல்கள்  இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர்ஆனால்வில்லியத்தின் கடற் போரில்  பயன்படுத்தப்பட்ட கப்பல்களின் விவரங்களையும்   அருங்காட்சியகத்தில் இன்று காண முடிகிறது. கப்பல் கட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் வரைபடங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இத்தனைக்கும் பிரான்சு -இங்கிலாந்து நாடுகளுக்கிடையே உள்ள தொலைவை  விட சோழனின் பயணம் பத்து மடங்கானது.  சமகாலத்தில்இருநாடுகளின்  அணுகுமுறையில் இந்த வேறுபாட்டை எவ்வாறு விளங்கிக் கொள்வது ?

 

 

3. மூன்றாவது கேள்வியும் அதே காலகட்டத்துடன்  தொடர்புடையது. . அந்த காலத்தில் மக்கள் அதிகம் படிக்காதவர்கள் என்பதாலும், வரலாற்றுப்  பதிவுகளுக்காக இதை உருவாக்கியவர்கள் சாமானியர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாலும் இந்தப் போர்எழுத்து வடிவு அல்லாமல் சித்திர வடிவில் ஆவணப்படுத்தப்பட்டது என்று அருங்காட்சியகத்தில் விளக்கம் அளிக்கின்றனர் .

அந்த சமயத்தில் ,  தமிழ்நாட்டில் ராமானுஜர் உயிருடன் இருந்தார்அப்போது அவருக்கு  வயது 50+ . அவர் விசிஷ்டாத்வைதம் தொடர்பான நூல்களை   சமஸ்கிருதம் மற்றும்  தமிழ் மொழிகளில் எழுதி முடித்திருப்பார்.. அந்தக் காலகட்டத்தின் தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் குறித்த  தரவுகள் நம்மிடம் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அவரை பின்பற்றுபவர்களும்  எதிர்ப்பாளர்கள் பலரும்  அவருடைய நூல்களை படித்திருப்பார்கள் என்று  கருத இடமுள்ளதுமேலும், அவர் தத்துவத்தின் உயர் மட்டங்களில் கவனம் செலுத்தியது , அந்த கால தமிழ்ச்  சமூகத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது.  ஆயினும்கூடதமிழ் சமூகம் இங்கிலாந்து/பிரான்ஸ்  அளவிற்கு தொழில்நுட்ப அறிவின் சக்தியை பிற்கால தலைமுறையினருக்கு ஏன் ஆவணப்படுத்த வில்லை அல்லது முடியவில்லை  ? இல்லையென்றால், பின்னர் அவை அழிக்கப்பட்டதா ?

 

 

இங்கிலாந்து/பிரான்ஸ்  மக்களின் வரலாற்று நுண்ணறிவுக்கு இன்னொரு சான்றையும்  இந்த பயணத்திலேயே காணமுடிந்தது .இரண்டாம் உலகப் போரின் போது (1939-45) , ஜெர்மனியிடம் இருந்து பிரான்ஸை  விடுவிக்க ஆங்கிலேயர்களும் நேச நாடுகளும் கடல் வழி வந்திறங்கிய புகழ்பெற்ற நார்மண்டி கடற்கரைகளுக்கு சென்றபோது, Bayeux தான், முதலில் விடுவிக்கப்பட்ட நகரம் என்ற தகவலை அறிய முடிந்தது. இந்த போரில் இறந்த தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரிட்டிஷ் Bayeux -வில் உருவாக்கிய கல்லறையில் கவித்துவமான குறிப்பு ஒன்று உள்ளது. இலத்தீன் மொழியில் உள்ள வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு : "ஒரு காலத்தில் வில்லியத்தால்  கைப்பற்றப்பட்ட  நாங்கள், இப்போது அவரின் பிறந்த நாட்டை   விடுவித்துள்ளோம்." 

 

 

 

அன்புடன் ,

 

J.K.மணிவண்ணன் 

C179, Prestige Ozone

Whitefield

Bangalore -560066

9500060123

 

என்னுடைய சொந்த ஊர் கடலூர் . அண்ணா பல்கலைக் கழகத்திலும்  IIM-Bangalore-லும்  கல்வி பயின்று, கடந்த 15 ஆண்டுகளாக DESICREW என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். வரலாறு மற்றும் தமிழ்  இலக்கியத்தில் மிக்க ஆர்வமும் ஒரு துளி அறிமுகமும்  உண்டு- ஏகலைவனுக்கு தூரத்து சொந்தம்..

https://www.desicrew.in/

 http://thebrokentuskchronicles.blogspot.com/2009/07/kallanai-for-unesco-heritage.html

 


Comments

Popular posts from this blog

நிகழ்ச்சி நிரல்

வெள்ளிமலை காவிய முகாம் – 2023 -வைணவ பக்தி இலக்கியம் 1 ஜா.ராஜகோபாலன்