வெள்ளிமலை காவிய முகாம் – 2023 -வைணவ பக்தி இலக்கியம் 1 ஜா.ராஜகோபாலன்
பெரியாழ்வார் பாடல்கள்
உறியை முற்றத்து* உருட்டி நின்று ஆடுவார்*
நறுநெய் பால் தயிர்* நன்றாகத் தூவுவார்*
செறி மென் கூந்தல்* அவிழத் திளைத்து* எங்கும்
அறிவு அழிந்தனர்* ஆய்ப்பாடி ஆயரே
விளக்கம் - பால் தயிர் நெய் முதலானவை வைத்திருந்த உறிகளை எடுத்து வந்து கண்ணனின் திருமாளிகை முற்றத்தில் உருட்டி உருட்டி தங்கள் மனம் போன படி ஆடுகின்றார்கள் சிலர். நறுமணம் மிக்க நெய், பால், தயிர் மூன்றையும் எல்லா இடங்களிலும் தூவுகின்றார்கள் சிலர். நெருக்கமாக வளர்ந்து மென்மையாக இருக்கும் கூந்தல் அவிழ்ந்ததும் தெரியாமல் மனம் ஆழ்ந்து திளைத்து ஆடுகின்றார்கள் சிலர். இப்படி நல்லது கெட்டது பிரித்தறியும் அறிவினை கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் இழந்து திருவாய்ப்பாடி முழுவதும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆயர்கள்.
2.
கிடக்கில் தொட்டில்* கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில்* மருங்கை இறுத்திடும்*
ஒடுக்கிப் புல்கில்* உதரத்தே பாய்ந்திடும்*
மிடுக்கு இலாமையால்* நான் மெலிந்தேன் நங்காய்.
விளக்கம்- 'கண்ணனைத் தொட்டிலில் உறங்குவதற்காக இட்டால் அந்தத் தொட்டில் கிழிந்து போகும்படி உதைக்கிறான். கையில் எடுத்துக் கொண்டாலோ இடுப்பை முறிக்கும் அளவிற்கு ஆடுகிறான். இறுக்கி அணைத்துக் கொண்டால் வயிற்றின் மேல் பாய்கிறான். தேவையான வலிமை இல்லாததால் நான் மிகவும் மெலிந்தேன் பெண்ணே' என்று யசோதைப் பிராட்டியார் தோழியிடம் முறையிடுகிறார்.
3.
புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி
பற்பநாபா கொட்டாய் சப்பாணி
விளக்கம் - திருவரையிற் படிந்த சேற்றையும், புழுதி மண்ணையும் கொண்டு வந்து (என் மேல்) இட்டு உறைக்கப் பூசி வீட்டினில் புகுந்து (எனக்கு நீ) தெரியாதபடி சட்டியில் வைத்திருக்கும் தயிரையும் மிடாக்களிலிருக்கிற வெண்ணெயையும்
உண்ணுகின்ற பட்டி மேய்ந்து திரியும் கன்று போன்றவனே! சப்பாணி கொட்டாய்-ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக் கொண்ட நாபியை யுடையவனே! சப்பாணி கொட்டாய்-.
4.
செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளைப் போலே
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடம் உடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர்நடை நடவானோ
விளக்கம் - சிவந்த அந்தி நேர வானத்தில் இருக்கும் பிறைநிலவானது, நமக்கு அது மரக்கிளையில் நுனிக்கொம்பின் இடையில் இருப்பது போல் தோன்றும். குட்டிக்கண்ணனின், மலர் விரிவதைப் போன்று இதமாய், இனிமையாய் சிரித்த சிவந்த வாயின் வீங்கிய ஈறில் புதிதாக முளைத்து எட்டிப்பார்க்கும் குளிர்ந்த பால் வெண்பற்கள் விளங்க இடையில் சங்குமணிகள் கோர்த்த அரைஞாண் கயிறும், மார்பில் பொன்னாலான ஆபரணமும் அணிந்து, அனந்தன் அணை மேல் அறிதுயில் புரிபவனான எம் பிரான் தரமான நீலமணிவண்ண தேகங்கொண்ட வாசுதேவன் புதல்வனே தளர்நடை நடவாயோ!
5.
பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே* அருவிகள் பகர்ந்தனைய*
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ* அணி அல்குல் புடை பெயர*
மக்கள் உலகினிற் பெய்து அறியா* மணிக் குழவி உருவின்*
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்* தளர்நடை நடவானோ
விளக்கம் - மலையின் மேலுள்ள, கரிய, சிறிய, சிறிய பாறைகளின் இடுக்குகளிலிருந்து வழிந்தோடும் அருவிநீரின் மேல், சூரிய ஒளியோ, சந்திர ஒளியோ படுகின்ற வேளையில் அந்நீர் பிரகாசிப்பதைப் போன்றது குட்டிக்கண்ணனின் இடையில் அணிந்துள்ள அரைஞாண்கயிற்றில் உள்ள சங்குமணிகள், அவன் நடக்கும் போது, இடுப்பிலுள்ள மேடு, பள்ளங்களில் ஏறி, இறங்கி அசைந்தாட இப்பூமியிலுள்ள மாந்தர் எவருக்கும் வாய்த்திராத அளவுக்கு அழகுடைய என் மழலைச் செல்வமே மேன்மையான, பெரிய நீலமணியின் வண்ணனே, வாசுதேவா தளர்நடை நடவாயோ!
6.
திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்* செங்கண்மால் கேசவன்* தன்-
திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி* திகழ்ந்து எங்கும் புடைபெயர*
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்* பெரியதோர் தீர்த்த பலம்-
தரு நீர்ச்* சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்* தளர்நடை நடவானோ
விளக்கம் - அலைகடல்நீரில் தெரியும் உதயசந்திரனைப் போல, செந்தாமரை இதழ்களைப் போன்று சிவந்த நிறமுடைய கண்களை உடைய திருமால், கேசவன் தன்னுடைய திரு நீர் முகத்தில் துலங்கும் சுட்டியானது, திகழ்ந்து எங்கும் புடை பெயர;பெருநீர்த் திரை எழுக்கூடிய கங்கையின் தீர்த்தம் தரக்கூடியதைக்காட்டிலும் மிகப்பெரும் புண்ணியம் தரக்கூடியதான நீர்... எந்த நீர்?பெரிய, பெரிய அலைகள் எழக்கூடிய கங்கை நீரைக்காட்டிலும், மாபெரும் புண்ணியம் தரக்கூடிய நீரினைகுழந்தைக்கண்ணனின் சிறு ஆண்குறியினின்று வெளியேறும் நீரானது சிறுசிறு துளிகளாகச் சிந்தத் தளர்நடை நடவானோ
7
வட்டு நடுவே* வளர்கின்ற* மாணிக்க-
மொட்டு நுனையில்* முளைக்கின்ற முத்தே போல்*
சொட்டுச் சொட்டு என்னத்* துளிக்கத் துளிக்க* என்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்
விளக்கம் - உருண்டு திரண்ட வட்டு (பந்து) நடுவில் வளர்கின்ற மாணிக்க(திருவுறுப்பு) மொட்டின் நுனியில், முளைக்கின்ற முத்தைப் போல் சிறு சிறுத் துளிகளாய் சிறுநீர் (முத்துத் துளிகள்) துளிகள், துளிக்கத்துளிக்க ஓடி வந்து என் பிள்ளை என்னை அணைத்துக் கொள்வான். கோவிந்தன் என்னை அணைத்துக் கொள்வான்.
8.
கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் *
ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான் *
கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய *
அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்களேறு என் புறம்புல்குவான்
விளக்கம் - எல்லா செல்வமும் நிறைந்து, மிகுந்திருந்த போதும், நல்ல மனச்செல்வம் தன்னிடத்து இல்லாத படியால், தன் உறவினர்களான பஞ்ச பாண்டவர்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து அவற்றை அனுபவிக்காது சுயநல ஆட்சி புரிந்த நூறு கௌரவர்களின் மூத்தவனான துரியோதனனின், சகோதரர்களையும், அவனுடைய சேனைகளையும் தோற்கடித்து அவனது அதர்ம அரசாட்சியை அடியோடு அழித்துத் தர்மத்தைக் காத்த தர்மத்தின் தலைவன் என்னைப் புறம்புல்குவான்! ஆயர்கள் ஏறு என்னை வந்து அணைத்துக் கொள்வான்!
9.
இரு மலை போல் எதிர்ந்த மல்லர்* இருவர் அங்கம் எரிசெய்தாய்!* உன்
திரு மலிந்து திகழு மார்வு* தேக்க வந்து என் அல்குல் ஏறி*
ஒரு முலையை வாய்மடுத்து* ஒரு முலையை நெருடிக்கொண்டு*
இரு முலையும் முறை முறையாய்* ஏங்கி ஏங்கி இருந்து உணாயே
விளக்கம் -இரண்டு மலை போலே வந்து எதிர்த்து நின்ற சாணூர முஷ்டிகர் என்னும் இரண்டு மல்லர்களுடைய உடம்பை பயத்தாலே எரியும் படி செய்தவனே, நீ வந்து என் மடி மீது ஏறிக் கொண்டு உன்னுடைய அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது பால் நிறையும்படி , ஒரு முலையை வாயிலே வைத்துக் கொண்டு மற்றொரு முலையை கையிலே நெருடிக் கொண்டு இருந்து மிகுதியாய் இருப்பது பற்றிப் பால் வாயில் அடங்காமையினால் இளைத்து இளைத்து இப்படி இரண்டு முலையையும் மாறி மாறிப் பொருந்தி இருந்து உண்பாயாக
10.
சொல்லில் அரசிப் படுதி நங்காய்!* சூழல் உடையன் உன்பிள்ளை தானே*
இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்* கையில் வளையைக் கழற்றிக்கொண்டு*
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற* அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து*
நல்லன நாவற் பழங்கள் கொண்டு* நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே
குறிப்பு விளக்கம் - நங்காய் - யசோதைப் பிராட்டி
சொல்லில் - உன் மகன் செய்த தீமைகளை நாங்கள் சொன்னால்
அரசிப்படுதி - அதற்காக நீ சீற்றம் கொள்ளாநின்றாய்
உன் பிள்ளைதான் - உன் பிள்ளையோ என்றாய்
சூழல் உடையனே - (பற்பல) வஞ்சனச் செய்கைகளை உடையவனா இருக்கின்றானே
11.
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு* தயிரும் விழுங்கி*
கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த* கலத்தொடு சாய்த்துப் பருகி*
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல* விம்மி விம்மி அழுகின்ற*
அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*
விளக்கம் - இந்த இடைச்சேரியிலோ காலை உச்சி அந்தியென்கின்ற மூன்று காலங்களிலும் பசுக்கள் கறக்கின்றன; இம்மூன்று காலங்களிலும் தயிர் கடைந்து வெண்ணெயெடுக்கிறார்கள். அப்படிக் கடைந்தெடுத்த வென்ணையையும் தயிரையும், இடையர்கள் காவடியிலே தம் தோளினால் சுமந்துகொண்டு வந்த பால்களையும் மிச்சமில்லாதபடி நீ குழந்தையாக இருக்கிற இப்பருவத்திலேயே உண்டு விடுகிறாய்; அப்படியுண்டும், முலைப்பாலையே தங்களுக்குத் தாரகமாகக் கொண்டு உண்டு அம்முலைப்பால் பெறாதபோது அழுகிற பிள்ளைகளைப் போலே என்னுடைய முலைப்பாலையுண்டதற்குப் பொருமிப் பொருமி அழவும் அழுகிறாய்; இப்படி அதிமாநுஷச் செயல்களையுடைய பெரியோனே! நீ மனிதனல்லையென்று நான் உணர்ந்து கொண்டேன்; ஆகவே உனக்கு அம்மந்தர அஞ்சுவேன் என்கிறாள்
12.
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்
பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ!
உன்னை என்மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
விளக்கம் – குழைந்த பருப்பையும் வெண்ணெயையும் விழுங்கிவிட்டு, குடத்தில் நிரம்பியிருந்த தயிரை சாய்த்து குடித்தும், பொய்யையும், மாயைகளையும் செய்யக்கூடிய அசுரர்கள் புகலிடம் கொண்ட இரட்டை மரங்களை விழுந்து முறியும்படி பண்ணியும், நீ இப்போது ஒன்றும் செய்யாதவன் போல வந்து நிற்கிறாய்! இப்படிப்பட்ட மாயச் செயல்களை செய்யவல்ல பிள்ளையே ! பூர்ணனே! உன்னை அறியாதவர்கள் 'என் மகனே' என்பார்கள். நானோ, நீ யார் எனப் புரிந்து கொண்டேன். உனக்கு பாலூட்ட என் முலையைத் தரவே பயமாக உள்ளது
Comments
Post a Comment