விக்னேஷ் ஹரிஹரன்

கவிதை [“லானா டர்னர் வீழ்ந்துவிட்டார்!”]

ஃப்ராங்க் ஓ ஹாரா

லானா டர்னர் வீழ்ந்துவிட்டார்!

அன்று நான் விரைந்து கொண்டிருக்கையில் திடீரென 

பனியும் மழையும் பொழியத் தொடங்கின 

நீ அதை ஆலங்கட்டி மழை என்றாய்

ஆனால் ஆலங்கட்டி மழை தலையில் அறையும்  

பொழிவது பனியும் மழையும்தான் 

அன்று உன்னை காணும் ஆவலில் 

நான் விரைகையில் 

போக்குவரத்து நெரிசலும் 

வானத்தைப் போலவே நடந்துகொண்டது

சட்டெனப் பார்த்தேன் அந்த தலைப்புச் செய்தியை

லானா டர்னர் வீழ்ந்துவிட்டார்!

ஹாலிவுட்டில் பனி கிடையாது

கலிஃபோர்னியாவில் மழையுமே கிடையாது

நானும் எத்தனையோ விருந்துகளுக்குச் சென்றிருக்கிறேன்

மிக மோசமாக நடந்தும் இருக்கிறேன்

ஆனால் வாஸ்தவத்தில் ஒரு நாளும் வீழ்ந்தது கிடையாது 

ஓ லானா டர்னர் 

நாங்கள் உன்னை காதலிக்கிறோம்

எழுந்திரு





















ஒஸிமாண்டியாஸ்

பெர்சி பைஷீ ஷெல்லி

தொல்நில யாத்ரீகன் ஒருவனை சந்தித்தேன் 

அவன் சொன்னான் "உடலற்ற இரு பெரும் கற்கால்கள் 

நிற்கின்றன பாலைவனத்தில். 

அவற்றினருகே 

அலட்சியச் சுளிப்பும் சுருக்கம் கண்ட உதடுகளும் 

அதிகாரப் புன்முறுவலும் பூத்த 

சிதைந்த முகம் ஒன்று

புதையுண்டு கிடக்கிறது மணலில். 

உயிரற்ற கல்லில் உறைந்திருக்கும் 

பாவனைகளில் தெரிகிறது 

சிற்பியின் திறமையும் 

செதுக்கப்பட்டவனின் இரக்கமற்ற அதிகாரமும். 

அதனை பரிகசித்த கைகளும். உண்டு வளர்ந்த இதயமும்.

அதன் பீடத்தில் இச்சொற்கள்:

"என் பெயர் ஒஸிமாண்டியாஸ். அரசர்களுக்கெல்லாம் அரசன்

வல்லமை மிகுந்தோரே,

என் படைப்புகளைக் கண்டு பொறாமை கொள்க" 

அந்த மாபெரும் சிதைவின் அருகிருந்ததெல்லாம் 

எல்லையற்ற பாலையின்

எல்லையற்ற மணல் வெளி மட்டுமே".            

Comments

Popular posts from this blog

நிகழ்ச்சி நிரல்

வெள்ளிமலை காவிய முகாம் – 2023 -வைணவ பக்தி இலக்கியம் 1 ஜா.ராஜகோபாலன்