அருள்
காலம் -- புழுதி
எங்கிலும் புழுதி
வாழ்க்கையின் தடங்களை
வாங்கியும் அழித்தும்
வடிவு மாற்றியும்
நேற்று நேற்றென நெரியும் புழுதி
தூரத்துப் பனிமலையும்
நெருங்கியபின் சுடுகல்லாகும்
கடந்தாலோ
ரத்தம் சவமாகிக் கரைந்த
செம்புழுதி
புழுதி அள்ளித்
தூற்றினேன்
கண்ணில் விழுந்து
உறுத்தின
நிமிஷம் நாறும் நாள்கள்
- அபி
______________________________ ___________
காலம் -- வாசனை
சுத்தமாய் ஒருநாளை
ஒதுக்கி
நிறுத்திவைப்போம்
எதற்கென்றுமில்லாமல்
அது
பரபரப்பதும்
பரிதவிப்பதும்
பார்த்திருப்போம்
ஜரிகையில் எழுதிய
தன்பெயர்
அழிய அழிய
அது பொருமிப்
பெருமூச்சு விடக்கூடும்
தன் நீள்சதுர உருவம்
மங்கமங்க
நழுவப்
பெரிதும் துடிக்கலாம்
வானம் தொட்டு நிமிர்ந்தும்
மண்ணில் குறுகி நெளிந்தும்
தன் மின் சக்தியால்
எங்கும் துழாவக்கூடும்
ஒதுங்கி நிற்போம்
தன்னுள்
செறிந்து பறக்கும்
துகள்களுள்
பதுங்கி மறைந்துள்ள
சப்தங்களை வருடிச்
சரி பார்க்கலாம்
உலகின் முழுச்சாயையும்
தேமல்போல் படர்ந்து
தினவு தருவதை
உணர்ந்தோ உணராமலோ
தன்னைத் தேய்த்துவிட்டுக் கொள்ளலாம்
சிரித்துக் கண்ணீர் சிந்தித்
திமிறி
தப்ப முடியாதெனக் கண்டு
கடைசியில்
அது
வாய்திறந்து
பேசி,
பேச்சின் வாசனையில் கரைந்து
தப்பிவிடக் கூடும்
அதுவரை
சுத்தமாய் ஒரு நாளை
ஒதுக்கி
நிறுத்திவைப்போம்
எதற்கென்றுமில்லாமல்
- அபி
ஏந்துதல்
தன்னிடமிருந்து
உதிர்ந்த பூ ஒன்றை
மண்தொடும்முன்னே வழிமறித்து
தன் உள்ளங்கை இலைஒன்றில் ஏந்தி
இமைக்காது உற்றுநோக்கிக்கொண்டிருந்தது
மரம்.
காம்பின்றிழந்த கவலையே இல்லை.
மரத்தை நாம் கைவிட்டாலும்
மரம் நம்மை கைவிடுமா என்ன,
அதன் கிளை இலைகல் நம்மை ஏந்தும்.
தன்னை தாங்கி நிற்கும்
மண்ணால் அது ஏந்தும்.
காலமற்ற வெளி ஏந்தும்
காண்பவர் விழிகளெல்லாம் ஏந்தும்
காதலறிவார் கைகள் ஏந்தும்
கருணை ஏந்தும்
உதிர்ந்த அம் மலரின் முகத்தில்
ஒருக்காலும் உதிர்தலறியாதோர் புன்னகை.
- தேவதேவன்
Comments
Post a Comment